ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீண்டும் சர்ச்சை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீண்டும் சர்ச்சை

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 7:05 pm

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் மத்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தியாகராஜா அண்மையில் வெளியிட்ட கருத்தினால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையும், நளினிக்கு ஆயுட் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கான பொறுப்பை வி. தியாகராஜா ஏற்றிருந்தார்.

பேரறிவாளன் தம்மிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்த விடயங்கள் ஆங்கில மொழி பெயர்ப்பின்போது, மாற்றமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பேரறிவாளன் உள்ளிட்ட கைதிகளின் கருணை மனுவை இந்திய குடியரசு தலைவர் ஏற்கனவே நிராகரித்திருந்தார்.

எனினும், தமது இந்த கருத்தை அடிப்படையாக கொண்டு பேரறிவாளன் மீண்டும் மனுத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திய 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புத்தூரில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் 26 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள்  சுமத்தப்பட்டதுடன், இதில் 19 பேர் மேன்முறையீட்டை அடுத்து விடுதலை செய்யப்பட்டனர்.

எஞ்சியவர்களில் நால்வருக்கு மரண தண்டனையும், மூன்று பேருக்கு ஆயுட் தண்டனையும் விதித்து, இந்திய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எவ்வாறாயினும், காங்கிரஸ் கட்யின் தலைவியும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பாரியாருமான சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் மரண தண்டனை பின்னர் ஆயுன் தண்டனையாக குறைக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்