அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை – ஜோன்ஸ்டன்

அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை – ஜோன்ஸ்டன்

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 2:20 pm

அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

ஜோன்ஸ்டன் தெரிவித்த கருத்து :-

“பொருட்களின் விலை உயர்வடையும் என்ற அச்சம் பொதுமக்களுக்களிடையே ஏற்பட்டுள்ளது.  ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை என நான் பொறுப்புடன் கூறிக் கொள்கின்றேன். பண்டிகை காலம் வரை தேவையான உணவுப் பொருட்களை நாம் விநியோகித்துள்ளோம்.  அச்சம் கொள்ள வேண்டாம் என பொதுமக்களிடம் கூறுகின்றோம்.  வரிப்பணம் அதிகரிக்கப்பட மாட்டாது.  பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது. அரிசி விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பல கருத்துக்கள் கூறப்பட்டன. அரிசிக்கு நிர்ணய விலையொன்று காணப்படுகின்றது. 60 தொடக்கம் 70 ரூபாவும், சம்பா 70 ரூபாவாகவும், நாட்டரிசி 60 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் நெல்லின் கொள்வனவு விலையை அதிகரிக்க வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நிர்ணய விலை தொடர்பில் வர்த்தகர்களை அசௌகரியத்திற்குள்ளாக்க கூடாது எனவும் நுகர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது”

இதேவேளை, பால்மா விலையை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜோன்ஸ்டன் தெரிவித்த கருத்து :-

“மூன்று மாதங்களாக நிறுவனங்கள் பால் மா விலையை அதிகரித்து தருமாறு வேண்டுகோள் விடுத்த வண்ணமுள்ளன. உலக சந்தையில் ஒரு தொன் பால்மாவின் விலை 5 ஆயிரம் டொலர்களாக அதிகரித்துள்ளது. ஒரு தொன் 3 ஆயிரத்து 700 டொலர்களாக காணப்பட்ட போதே நாம் விலை தொடர்பில் தீர்மானித்தோம். கடந்த ஆண்டு ஏழு மாதங்களுக்கு இலாபகரமாக அவர்கள் பால் மாவை கொண்டு வந்துள்ளனர். 6 மாதங்கள் அதிக விலையில் பால்மாவை கொண்டு வந்துள்ளனர். நியாயத்தை நிலைநாட்டுவதற்கு நாம் இருக்கின்றோம்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்