பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இலங்கை விஜயம்

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இலங்கை விஜயம்

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இலங்கை விஜயம்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2013 | 5:13 pm


பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் இன்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.
பிரித்தானியாவுக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்த இளவரசர் சார்ள்ஸ் மற்றும் இளவரசி கெமிலா பாகர் ஆகியோரை அமைச்சர்கள் சிலர் வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் விசேட வாகன பவனியில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்.
இம்முறை இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பிரதம அதிதியாக இளவரசர் சாள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
இளவரசர் சார்ள்ஸ் இன்று தனது 65 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாளை ஆரம்பமாகவுள்ள 23 ஆவது பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஏற்கனவே 21 நாடுகளின் அரச தலைவர்கள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
இதனைத் தவிர 29 நாடுகளின் வெளிவகார அமைச்சர்களும் பொது நலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் மேலும் ஐந்து நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் வருகைதந்துள்ளனர்.
பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சைபிரஸ். தான்சானியா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளும், காணாவின் உப ஜனாதிபதியும் இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் மலேஷிய பிரதமர் நஜீப் ரசாக் ஆகியோரும் ஏற்கனவே நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.
பஹமாஸ், சொலமன் தீவுகள், லெசோத்தோ, மோல்டா, புனித கீட்ஸ் மற்றும் நேவிஸ் ஆகிய நாடுகளின் பிரதமர்களும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
இதேவேளை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்களின் வருகையை முன்னிட்டு இன்றிரவு 7.30 தொடக்கம் இரவு எட்டு மணி வரையும், இரவு 11.30 தொடக்கம் நாளை அதிகாலை ஒரு மணி வரையும் கட்டுநாயக்க அதிவேக வீதி உள்ளிட்ட மேலும் பல வீதிகள் அவ்வப்போது மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதி, களனி பாலத்திலிருந்து பொரளை கனத்தை சுற்றுவட்டம் வரையான பேஸ் லைன் வீதி, பௌத்தாலோக்க மாவத்தை, பம்பலப்பிட்டி சந்தியிலிருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான காலி வீதி என்பன குறித்த காலப் பகுதியில் மூடப்படவுள்ளன
வீதிகள் மூடப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்