வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளருக்கு கொலை மிரட்டல்

வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளருக்கு கொலை மிரட்டல்

வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளருக்கு கொலை மிரட்டல்

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 8:58 pm


யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ். வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நாளை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு கோரி, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், மாடுகளின் தலைகள் அவர்களின் வீடுகளுக்கு முன்னால் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அகிம்சை ரீதியாக மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதாக வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் குறிப்பிடுள்ளார்.
 சோமசுந்தரம் சுகிர்தன்;-
”வலிகாமம் வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் 23 வருடங்களாக அகதி முகாங்களில் வாழும் மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி 12 முதல்16 வரை நடைபெறவுள்ள உண்ணாவிரத்தை ஒட்டி நாங்கள் சில ஏற்பாடுகளை செய்திருந்தோம். எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான செயல்களில் ஈடுபடக்கூடாது உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தக்கூடாது அவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் தலையில்லாத முண்டமாக உங்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவீர்கள் என்று மிரட்டப்படது. அதனைத் தொடர்ந்து இரவு இறந்த மாட்டின் தலையைக் கொண்டு வந்து என்னுடைய வீட்டு வாசலில் வைத்துள்ளனர். எங்களுடைய ஜனநாயக உரிமையின் அடிப்படையில் எங்களுடைய மக்களின் மீள்குடியேற்றத்தையே வலியுறுத்துகின்றோம். வேறு எந்தவிதமான ஆயுதப்போராட்டத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை. அகிம்சை ரீதியாக எங்களுடைய மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்கள் வரும்பொழுது இந்தப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கின்றோம்”.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் யாழ். சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்