பொதுநலவாய நாடுகளின் ஒன்பதாவது இளைஞர் மாநாடு ஆரம்பம்

பொதுநலவாய நாடுகளின் ஒன்பதாவது இளைஞர் மாநாடு ஆரம்பம்

பொதுநலவாய நாடுகளின் ஒன்பதாவது இளைஞர் மாநாடு ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 7:28 pm

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு நடைபெறுகின்ற 9ஆவது இளைஞர் மாநாடு இன்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமானது.
பொதுநலவாய நாடுகளின் இளைஞர் மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பமானது.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வரவேற்றனர்.
இளைஞர் மாநாடு நடைபெறும் ஹம்பாந்தோட்டை மாகம்புர சர்வதேச மாநாட்டு மண்டபம் இலங்கையின் இரண்டாவது சர்வதேச மாநாட்டு மண்டபமாகும்.
42 நாடுகளை பிரதிநிதித்துவபடுத்தி இளைஞர் யுவதிகள் பெருந்திரலானோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் கலாசார நிகழ்வுகள் பலவும் நடைபெற்றன.
பொதுநலவாய அமைப்பின் இளைஞர் சம்மேளனத்தின் முதலாவது அமர்வு இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
இதன்போது கருத்து தெரிவித்த இளைஞர் விவகாரம் மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும
டலஸ் அழகப்பெரும – இளைஞர் விவகாரம் மற்றும் திறன் விருத்தி அமைச்சர்;-
”உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கின் எதிர்காலம் உங்களிடம் உள்ளது. அடுத்த நூற்றாண்டுக்காக, உங்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. வெற்றிக்கான பாதையை தெரிவுசெய்வதற்கு வழிகாட்டும் ஒளியாக இங்கு நீங்கள் பெற்றுக்கொள்ளும் தலைமைத்துவம் காணப்படும். தமது மக்களுக்கு சிறந்த பொதுநலவாயத்தை வழிசெய்யும் வகையிலான தொடர் உந்துசக்தியாக இந்த நிகழ்வு அமையட்டும். அதனைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான கடின உழைப்பு மற்றும் துணையாக எமது இந்த பயணம் அமைவதற்கு இளைஞர்கள் முன்வருவதற்கு இதுவொரு ஆரம்பமாக இருக்கட்டும். உங்கள் எண்ணங்களை எம்மீது திணிக்கவேண்டாம். சரியாக எண்ணி, பொதுநலவாயத்திற்கு தொடர் ஆதரவை வழங்குவதன் ஊடாக இந்த உலக அமைப்பின் ஒரு பங்காளராக நாமும் மாறுவோம்”.
எலி செக்கோலட் – பொதுநலவாய இளைஞர் மாநாடு  – இணைத் தலைவர்:-
”மதிப்பு, ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் ஊடாக உங்களுக்கு பொருந்தமான இடத்திலிருந்து வெளியேவந்து, உங்களை சோதித்து, உங்கள் தலைமைத்துவ திறன்களை சோதித்து பார்க்குமாறு நான் உங்களுக்கு சவால் விடுக்கின்றேன். இளைஞர்களுக்கு அஞ்சும் சமூகத்தினைச் சார்ந்த பலரும் இன்று சமூகத்தில் உள்ளனர். ஏன்? ஏன் அவர்கள் நமக்காக அஞ்ச வேண்டும்? ஏனெனில் இந்த உலகத்தில் உள்ள பல்வேறு சவால்களுக்கு எம்மிடம் தெளிவான பதில் உள்ளது, என்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். எமது எதிர்காலத்திற்குத் தேவையான புரட்சிகளை மேற்கொள்வதற்கான தேவையும், திட்டமிடலும், எம்மிடம் உள்ளன. அவர்கள் மாற்றத்திற்கு பயப்படுகின்றனர். இதனால் ஏற்படும் இலாபங்களை தமக்குள் வைத்துக்கொள்ள நினைக்கின்றனர். இவை எதுவும் உங்களை ஒருநாளும் தடுக்காது. தைரியமாக இருங்கள்”.
கமலேஷ் சர்மா – பொதுநலவாய அமைப்பின் செயலாளர்;-
”வேகமாக நகரும், நெருக்கமாக தொடர்புட்டுள்ள இன்றைய உலகில் தேசிய அபிவிருத்தி, சமூகங்களின் பெறுமதி, உலகளாவிய ரீதியில் பொதுநலவாயத்திற்கான அபிவிருத்தி என்பவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இந்த காலத்திலுள்ள இளைஞர்கள் உலகளாவிய ரீதியிலுள்ள இளைஞர்களுடன் இலகுவாகவும், தாமதமின்றியும் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு மற்றும் திறன் என்பன முன்னைய காலங்களில் காணப்படவில்லை. நான் நினைப்பதனை விடவும், உங்கள் பரம்பரை வேறு விதமாக விடயங்களை சிந்திக்கின்றது. எவரும் வெளியேற்றப்படாத, பின்தள்ளப்படாத ஒரு எதிர்காலத்தினை கட்டியெழுப்புவதற்கான முக்கியத்துவத்தை சர்வதேசத்திற்கும், எமது இளைஞர்களுக்கும் வழங்குவதே இந்த மாநாட்டின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது”.
ஜனாதிபதி;-
”பொதுநலவாய அமைப்பு இளைஞர்களை நன்றாக அடையாளங்கண்டுள்ளது. ஏனெனில் சாதகமான மற்றும் செயற்றிறன்மிக்க அவர்களின் செயற்பாடுகள மற்றும் அபிவிருத்தி, சமாதானம், ஜனநாயகம் என்பவற்றை மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தல், சகிப்புத்தன்மை, ஏனைய கலாசாரங்களுக்கு மதிப்பளித்தல் என்பவற்றை கொண்டுள்ள இளைஞர்களை அமைப்பு நன்றாகப் புரிந்துகொண்டுள்ளது. எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய அமைப்பை வழிப்படுத்தும் இலங்கையின் நிலைப்பாட்டில், நாம் எமது சிறந்த ஒத்துழைப்பை வழங்குவோம். பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளை புரிந்துகொண்டு இணைந்து செயற்படுவதற்கு ஆக்கபூர்வமானதும், அர்த்தமுள்ளதுமான வாய்ப்புக்களை பொதுநலவாய இளைஞர் பிரதிநிதிகளுக்கும், இலங்கையின் பிரதிநிதிகளுக்கும் வழங்குவோம். இந்த இளைஞர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு என்பவற்றுடன் பொதுநலவாய அமைப்பின் எதிர்கால வெற்றிக்காக நேர்மையான நம்பிக்கையுடன் நாம் இவற்றினை முன்னெடுக்கின்றோம். இந்த காலப்பகுதியில முன்னெடுக்கும அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவேன் எனவும், உறுதுணையாக இருப்பேன் எனவும் பொதுநலவாய அமைப்பின் தலைவர் என்ற வகையில், உறுதியளிக்கின்றேன்”.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்