மைதிலி துஷ்பிரயோகத்தின் பின் கொலை செய்யப்பட்டுள்ளார் – தந்தை

மைதிலி துஷ்பிரயோகத்தின் பின் கொலை செய்யப்பட்டுள்ளார் – தந்தை

மைதிலி துஷ்பிரயோகத்தின் பின் கொலை செய்யப்பட்டுள்ளார் – தந்தை

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 7:03 pm


தனது மகள் மைதிலி  துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர், கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ். புத்தூர் பகுதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
மகளின் மரணம் தொடர்பான உண்மைகளை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மைதிலியின் தந்தை ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தனது மகள் சடலமாக மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்பட்டதுடன், அவர் அணிந்திருந்த சட்டையின் பொத்தான்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி பிற்பகல் 3.30 அளவில் 27 வயதான மைதிலியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள வயல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்ட தினத்திற்கு முதல்நாள் இரவு மைதிலி கையடக்க தொலைபேசியில் உரையாடியவாறு  வீட்டிற்கு வெளியில் சென்றுள்ளார்.
யுவதி வீடு திரும்பாமையால் இரவு முழுதும் அவரைத் தேடிய பெற்றோர் மறுநாள் காலை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அன்றைய தினம் பிற்பகல், மைதிலியின் உடல் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் மிதப்பதை அயலவர்கள் அவதானித்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், விசாரணைகளை ஆரம்பித்தனர்.
யுவதியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் சட்ட வைத்திய அதிகாரியினால் நடத்தப்பட்டது.
புத்தூரில் இடம்பெற்ற சம்பவம் குறித்து உடனடியாக பிரேத பரிசோதனையும், உடற்கூற்று பரிசோதனையும் நடத்தி தற்காலிக அறிக்கையொன்றை அன்றைய தினமே பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் சட்டவைத்திய அதிகாரி எஸ். சிவரூபன் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை, அவரின் உடலில் காயங்கள் காணப்பட்டமை மற்றும் பாலியல் ரீதியில் உடலுறவு கொள்ளப்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹணவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
அஜித் ரோஹன – பொலிஸ் பேச்சாளர்: –
”உயிரிழந்துள்ள 27 வயதான குறித்த பெண் கடந்த 28 ஆம் திகதி இரவு வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இது குறித்து 29ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டில் பெண் காணாமல் போயுள்ளதாகவும் பின்னர் அவர் கிணற்றில் சடலமாக கிடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய சடலம் மீட்கப்பட்டதுடன், நீதவான் விசாரணையும், யாழ் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டிருந்தன. பிரேத பரிசோதனையின் பிரகாரம் அதற்கான காரணம் இதுவரை முன்வைக்கப்படவில்லை. யுவதியின் கையடக்கத் தொலைபேசியின் விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிரேத பரிசோதனை அறிக்கையின் பிரகாரமும், நீதவான் விசாரணையின் இறுதி முடிவின் பின்னரும், இதுவொரு ஆட்கொலையாக காணப்படும் பட்சத்தில் அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து கிடைத்துவரும் தகவல்களின் பிரகாரம் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது. ஆயினும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே ஸ்திரமான முடிவொன்றை எடுக்கமுடியும்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்