மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து பிரதமரே இறுதி முடிவு எடுப்பார் – காங்கிரஸ்

மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து பிரதமரே இறுதி முடிவு எடுப்பார் – காங்கிரஸ்

மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து பிரதமரே இறுதி முடிவு எடுப்பார் – காங்கிரஸ்

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 9:24 pm


இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து இந்தியப் பிரதமரே இறுதி முடிவு எடுப்பார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
கொழும்பில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோனி, பா. சிதம்பரம், ஜி.கே.வாசன், நாராயணசாமி, ஜெயந்தி நடராஜன் ஆகியோர் பிரதமர் இலங்கை செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் சிறந்ததொரு முடிவை எடுப்பார் என இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே வாசன் நேற்று செய்திளார்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
ஜிகே வாசன் தெரிவித்தகருத்து :
“கொமன்வெல்த் மாநாடு குறித்து பிரதமரை 2 முறை நேரில் சந்தித்து தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலித்திருக்கிறேன். எனவே தமிழக மக்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு பிரதமர் அவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”
ஆனால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்றால், தமிழர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிட்டும் என மத்திய அமைச்சர் சுதர்ஷன நாச்சியப்பன்  சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதர்ஷன நாச்சியப்பன்  தெரிவித்த கருத்து :-
“41 இலட்சம் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வாழ்கிறார்கள். பிரதமர் அவர்கள் முதலில் அந்தப் பகுதிக்கு சென்று அவர்களைச் சந்திக்க வேண்டும். அதற்குப் பின் கொழும்புக்கு செல்வாரேயானால், தமிழ் மக்களுக்கு நாம் முழுமையாக துணை நிற்கிறோம் என்பதை முழு உலகிற்கும் அறியச் செய்யலாம்”
பொதுநலவாய மாநாட்டு விவகாரத்தில் மத்திய அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தப் பிரச்சினையில் முதற்தடவையாக காங்கிரஸ் கட்சி கருத்து வெளியிட்டுள்ளதாக சன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒரு உணர்வுபூர்வமான நிலை எனவும், இந்த விடயத்தில் அரசின் நிலைப்பாடு எதுவோ, அதுவே காங்கிரஸின் நிலைப்பாடு எனவும் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் நேற்று டெல்லியின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எனினும் மாநாட்டில் பங்கேற்பது குறித்தும் பிரதமரே இறுதி முடிவு செய்வார் என்றும் அவர் இந்த ஊடகவியலளர் சந்திப்பில் குறிப்பிட்டதாக சன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டு மக்களின் கருத்துகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் அனைத்து விடயங்கள் குறித்தும் செயற்படும் என காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மீம் அப்சால் தெரிவித்தார்.
 மீம் அப்சால் தெரிவித்த கருத்து :-
“எமது நாட்டில் நாட்டுக் கொள்கை மற்றும் சர்வதேச கொள்கை என்பன காணப்படுகின்றன. இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கும் போது சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழ் நாட்டு மக்களின் கருத்துகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் அனைத்து விடயங்கள் குறித்தும் செயற்படும்”
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் காரணமாக, ஏனைய நாடுகளுடன் இந்தியாவுக்கு சிறந்த உறவுகள் இல்லை என பாரதீய ஜனதாக் கட்சியின் உப தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி குறிப்பிட்டுள்ளார்.
 முக்தார் அப்பாஸ் தெரிவித்த கருத்து :-
“காங்கிரஸ் கட்சிக் கொள்கையில் காணப்படுகின்ற பலவீனங்களால் தான் ஏனைய நாடுகளுடன் இந்தியாவுக்கு சிறந்த உறவுகள் இல்லை. இன்று இந்தியாவுக்கு நண்பர்கள் இல்லை. இலங்கையுடன் இன்று இதே நிலை காணப்படுகின்றது. இவ்வாறான விடயங்கள் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது”
பிரதமர் இலங்கைக்கு செல்லாவிடின் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் உறவில் விரிசல் ஏற்படலாம் என ஜனதா தள ஜக்கிய கட்சியின் உறுப்பினர் சபீர் அலி சுட்டிக்காட்டினார்.
 சபீர் அலி தெரிவித்த கருத்து :-
“மன்மோகன் சிங்கின் இலங்கை விஜயத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது இயற்கையானது. அத்தோடு எமது நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கின்றது. ஆயினும் பிரதமர்  இலங்கைக்கு செல்லாவிடின் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் உறவில் விரிசல் ஏற்படலாம். சர்வதேச ரீதியில் இதை அவதானிக்கும் போது இந்த செயற்பாடு எமக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். நாட்டிற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கையொன்று இருக்கின்றது. ஆனாலும் பொதுநலவாய மாநாடு இதற்கு சம்பந்தமற்றதாகும். எமது பிரதமர் நிச்சயமாக இலங்கைக்கு செல்ல வேண்டும்”
இந்தியப் பிரதமர் முழு நாட்டுக்கும் பொருந்தும் வகையில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என சமாஜ்யவாதிக் கட்சியின் உறுப்பினர் நரேஷ் அகர்வால் குறிப்பிட்டார்.
 நரேஷ் தெரிவித்த கருத்து :-
“இந்தியப் பிரதமர் ஒரு பகுதி​யை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்பட முடியாது. முழுநாட்டுக்கும் பொருந்தும் வகையில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்