ஜோன் கெரி சவுதி அரேபியாவிற்கு விஜயம்

ஜோன் கெரி சவுதி அரேபியாவிற்கு விஜயம்

ஜோன் கெரி சவுதி அரேபியாவிற்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 12:08 pm

சவுதி அரேபியாவுடன் பாதிக்கப்பட்டுள்ள உறவை சீர்செய்யும் இலக்குடன் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி ரியாத்தை சென்றடைந்துள்ளார்.
தமது தலைமைத்துவத்தின் கீழ் சிரியா மீதான நடவடிக்கைக்கு அமெரிக்கா தயக்கம் காட்டுகின்றமை தொடர்பில் சவுதி அரேபியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
சிரியா தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஈரானின் பின்புலத்துடனான அரசாங்கம் சிரியாவில் அமைவதற்கு வழிவகுக்கும் எனவும் சவுதி அரேபியா அச்சம் வெளியிட்டுள்ளது.
அத்துடன் தெஹ்ரானின் அணுத்திட்ட சர்ச்சை தொடர்பான அமெரிக்காவின் மீள் அணுகுமுறை குறித்தும் சவுதி அரேபியா கவலை கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
 
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தின் ஒர் கட்டமாக முன்னறிவிப்பு அற்ற வகையில் எகிப்திற்கு சென்ற ஜோன் கெரி வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருமாறும், ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தியிருந்தார்.
எகிப்தின் புதிய ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எகிப்து விவகாரம் காரணமாகவும் அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான உறவில் விரிசில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட மொஹமட் மூர்சி பதவி கவிழ்க்பப்பட்ட பின்னர், அந்த நாட்டிற்கான தமது இராணுவ உதவிகளை அமெரிக்கா இடைநிறுத்தியிருந்தது.
எனினும் புதிய இராணுவ பின்புலத்துடனான எகிப்து அரசாங்கத்திற்கு சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவங்களின் பின்புலத்தில் அமெரிக்காவுடனான உறவில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக சவுதி அரேபியாவின் புலனாய்வு பிரிவு சிரேஷ்ட அதிகாரி இளவரசர் பந்தர் பின் சுல்தான், ஐரோப்பிய இராஜதந்திரிகளுக்கு குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்