நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம்

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அங்குரார்ப்பணம்

by Staff Writer 29-11-2026 | 6:46 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதியில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையம் உத்தியோகபூர்வமாக இன்று(29) திறந்து வைக்கப்பட்டது.

நெடுந்தீவு, இலங்கையின் வடக்கே, யாழ். குடாநாட்டின் தென்மேற்கேயுள்ள தீவாகும்.

இங்கு 1,300 குடும்பங்களைச் சேர்ந்த 4,500 பேர் வசிப்பதுடன் கடல்வழிப் போக்குவரத்தையே இவர்கள் நம்பி வாழ்கின்றனர்.

நெடுந்தீவில் இதுவரை காலமும் நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில் அங்கு வாழும் மீனவர்கள் உள்ளிட்ட மக்களின் நீண்ட கால தேவையை பூர்த்தி செய்யும் நிமித்தம் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இவ்வளவு காலமும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள தீவிலிருந்து குறிகட்டுவான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நேரிட்டதுடன், பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டிருந்தனர்.

2025 ஒக்டோபர் மாதம் குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி நிகழ்வின்போது, நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

தொடர்ந்து 2026 ஜூலை மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுதாபனத்தின் 40 மில்லியன் ரூபா நிதியுதவியில் நெடுந்தீவில் அமைக்கப்பட்ட இந்த புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருணா, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், நெடுந்தீவு பிரதேச செயலாளர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

ஏனைய செய்திகள்