.webp)
-561745.jpg)
COLOMBO (News 1st) சம்பளம், கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை (30) முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனப் பல தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் வேலைநிறுத்தம் அல்லது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை எனவும் குறித்த தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அரச சேவையில் ஆட்சேர்ப்புகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியிலும், 2016 ஆம் ஆண்டு முதல் இரத்து செய்யப்பட்டிருந்த ஓய்வூதிய உரிமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது தேவையற்றது என உள்நாட்டு இறைவரி திணைக்களம், சுங்கம் மற்றும் கலால் தொழிற்சங்க குழுக்கள் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தன.
இதேவேளை, அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழுவின் 20 தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட மேலும் பல சங்கங்கள் நாளைய தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்காமலிருக்க தீர்மானித்துள்ளதுடன், நிலவும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக அக்குழுவின் பொருளாளர் சம்பத் தேஷப்பிரிய குறிப்பிட்டார்.
மேலும் அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் ஆகியனவும் நாளை (30) வேலைநிறுத்தத்தில் பங்கேற்க மாட்டாது என உறுதிப்படுத்தியுள்ளன.
சம்பளம் தொடர்பான விரிவான முன்மொழிவொன்றை தமது சங்கம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளதாகவும் அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
2027 வரவு - செலவுத் திட்டத்தில் எவ்வித சம்பள உயர்வையும் கோரவில்லை என்பதுடன், சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை எவ்வித இடைக்கால சம்பள திருத்தத்தையும் எதிர்பார்க்கவில்லை எனவும் இலங்கை பொது நிர்வாக சேவை சங்கம் அறிக்கையொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நியாயமான பொருளாதார மற்றும் தொழில்சார் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக அரச அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, தேவையான தலையீடுகளை செய்து வருவதாக தெரிவித்துள்ள இலங்கை கணக்காளர் சேவைச் சங்கமும், நாளை (30) வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.
