.webp)

Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று(25) 100 மில்லிமீட்டருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.
இதனிடையே மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் உடநுவர, கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிடிய, கேகாலை, கலிகமுவ, எட்டியந்தொட்டை, மாவனெல்ல மற்றும் கேகாலை, ரம்புக்கனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல மற்றும் அரநாயக்க, கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தெதுரு ஓயா உள்ளிட்ட 17 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
