2027 வரவு - செலவுத் திட்டம் இன்று(12) பாராளுமன்றில

2027 வரவு - செலவுத் திட்டம் இன்று(12) பாராளுமன்றில்..

by Staff Writer 12-11-2026 | 12:42 PM

Colombo (News 1st) 2027ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் இன்று(12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது சுதந்திர இலங்கையின் 81ஆவது வரவு - செலவுத் திட்டமாகும்.

எதிர்வரும் ஆண்டிற்கான அரசாங்கத்தின் செலவீன மதிப்பீடு 4,992.77 பில்லியன் ரூபாவாகும்.

ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு எனப்படும் வரவு - செலவுத் திட்ட உரை இன்று பிற்பகல் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான இந்த வரவு செலவுத் திட்டம், அபிவிருத்தியை நோக்கிய பயணத்திற்கு தேவையான அடித்தளத்தை அமைக்கும் வரவு செலவுத் திட்டமாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார்.

நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டிய தரப்பினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பொதுவான நிவாரணங்களும் குறிப்பிட்ட தேவைகளுக்கான நிவாரணங்களும் இதில் உள்ளடக்கப்படலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, வரையறைகளுக்கு உட்பட்டு பொருத்தமான நிவாரணங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிச்சயமாக இடம்பெறும் என எதிர்பார்க்கலாம் என அவர் கூறினார்.

எனினும், வரவு செலவுத் திட்டத்தில் தமக்காக எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் எதிர்பார்க்காமல், மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாத்து பொருளாதார மாற்றத்திற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், நிதி ஒழுக்கத்தை பேணுவதற்கும் ஊழல் மோசடிகளை தவிர்ப்பதற்கும் மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, வழமை போன்று வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள், தூதுவர்கள், அமைச்சரவை செயலாளர்கள் உள்ளிட்ட வழக்கமான அழைப்பாளர்களுக்கும், நிதி அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் இந்த வரவு - செலவுத் திட்ட உரையில் கலந்துகொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகம் முழுவதும் விசேட பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றப் பொலிஸாருக்கு மேலதிகமாக, ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும், சுற்றுப்புற பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படையினரும் தங்களது சேவைகளை வழங்கி வருவதாக அவர் கூறினார்.

அத்துடன், கடற்படையினரும் வழமை போன்று விசேட பாதுகாப்பை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.