.webp)
-625834-561044.jpg)
Colombo (News 1st) சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்குவதற்கு சவுதி உயர்நீதிமன்றம் எடுத்தத் தீர்மானத்தை வரவேற்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பு அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த விவகாரத்தில் அக்கறையுடன் செயற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் மிகப்பெரிய ஒரு ஆறுதல் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சவுதி அரேபிய அரசுக்கு விசேட நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் இந்தச் சட்ட நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இரு நாடுகளின் இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுக்களுக்கு இலங்கை அரசின் பாராட்டுக்கள் உரித்தாகுவதாகவும் ஜனாதிபதி தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அனோஜனுக்கு எதிராக காணப்படும் எஞ்சிய சட்ட நடைமுறைகள் பூர்த்தியாகும் வரை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்தும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் எந்தவொரு இலங்கையருக்கும் "தாம் தனித்து விடப்பட்டுள்ளோம்" என்ற எண்ணம் ஏற்படக் கூடாது எனவும் ஜனாதிபதி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சவுதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கைக்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது.
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச்செய்ய இந்தியா நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் அத்தகைய ஒரு வேண்டுகோளை உத்தியோகபூர்வமாக முன்வைக்கவில்லை.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் தனித்து இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஊடாக அனோஜனின் மரண தண்டனையை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் இந்த விடயத்தை சிறப்பாக கையாண்டு அவரது மரண தண்டனையை இரத்துச் செய்துகொண்டமை தொடர்பாக இந்தியா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இதேவேளை, அயல் நாட்டிற்கு முதலிடம் அளிக்கும் தமது கொள்கையின் கீழ் இலங்கைக்கு எப்போதும் முக்கியத்துவம் வழங்கப்படுவதாக இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மக்களில் 79 சதவீதமானோர் இந்தியா தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக அண்மைய ஆய்வொன்று உறுதிப்படுத்தியமை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவை பிரதிபலிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, சிவராசா அனோஜன் விவகாரத்தில் தலையீடு செய்த ஜனாதிபதிக்கும் சவுதி அரசாங்கத்துக்கும் சர்வதேச இந்துமத பீடம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இலங்கை வாழ் மக்களுக்கும் இந்த செய்தி மகிழ்ச்சியை தந்துள்ளதாக சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர பாபு ஷர்மா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
இதனிடையே சிவராசா அனோஜனின் வழக்கில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை மனப்பூர்வமாக வரவேற்பதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் உரிய சட்டச் செயன்முறைகளும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்படும் நாளிலேயே எமது முயற்சி முழுமை பெறும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
