பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட கலந்துரையாடல்

பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட கோபா குழுவில் விசேட கலந்துரையாடல்

by Staff Writer 03-10-2026 | 1:10 PM

COLOMBO (News 1st)

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதன் செயற்திறனை மேம்படுத்துவது தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு எனும் கோபா குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 
பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடும் செயன்முறையின் வினைத்திறனை மேம்படுத்துதல், வினாத்தாள் மதிப்பீட்டுச் செயன்முறை, பரீட்சார்த்திகளை ஈடுபடுத்துதல் மற்றும் பரீட்சை நடவடிக்கைகளின் இரகசியத்தன்மையைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. 
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் ஏற்கனவே வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு  அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.
பரீட்சை நடவடிக்கைகளுக்குத் தேவையான இடவசதிகள், தொழிநுட்ப உபகரணங்கள் மற்றும் அச்சிடும் வசதிகள், பரீட்சைகள் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கொடுப்பனவுகள் மற்றும் கட்டணங்களைத் திருத்துதல் மற்றும் புதிய தொழிநுட்ப முறைகளை அறிமுகப்படுத்துதல் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
பரீட்சைப் பெறுபேறுகளை விரைவாக வெளியிடுவதற்காக புதிய தொழிநுட்ப முறைமையை அறிமுகப்படுத்துதல், தனியான மதிப்பீட்டு நிலையமொன்றை நிறுவுதல் மற்றும் நிறுவன ரீதியான பரீட்சைகளை வினைத்திறனுடன் நடத்துதல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.