22ஆவது சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பு

நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான 22ஆவது சட்டமூலத்தை நிறைவேற்ற பொதுமக்கள் கருத்துக்கணிப்பு அவசியம் இல்லை - உயர்நீதிமன்றம்

by Staff Writer 22-09-2026 | 11:33 AM

COLOMBO (News 1st) பிரதம நீதியரசர் உள்ளிட்ட மேல்நிலை நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 2 வருடங்களால் நீடிப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் கருத்துக்கணிப்பு அவசியம் இல்லை என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் 2 பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்பதே உயர்நீதிமன்றத்தின் தீர்மானமாகும். 

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று (22) முற்பகல் அறிவித்தார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைய சட்டமூலத்தில் 2 சரத்துக்களை திருத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருத்தத்திற்கு அமைய  சட்டமூலம் நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் பதவியில் இருக்கும் பிரதம நீதியரசர் தனது 67ஆவது வயதை பூர்த்திசெய்யும் நாளில் ஓய்வுபெற வேண்டும்.

அதனை தொடர்ந்து பதவியேற்கும் பிரதம நீதியரசர் தனது 67ஆவது வயது பூர்த்தியாகும் நாளில் அல்லது பதவியேற்று 6 வருடங்கள் பூர்த்தியாகும் நாளில் எது முதலில் வருகின்றதோ அந்த தினத்தில் ஓய்வுபெற வேண்டும்.

இதேவேளை ஏனைய நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 2 வருடங்களால் நீடிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட நீதித்துறை சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.