சிறைச்சாலை மோதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள்

சிறைச்சாலை மோதல்களை தடுத்தல் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் உயர்மட்ட கலந்துரையாடல்

by Staff Writer 23-08-2026 | 1:38 PM

Colombo (News 1st) சிறைச்சாலைகளில் வன்முறைகள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.


கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலும் ஆகஸ்ட் 18ஆம் திகதி மஹர சிறைச்சாலை உள்ளிட்ட மேலும் சில சிறைச்சாலைகளிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.


பாதுகாப்பு, நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களின் பிரதிநிதிகள், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபஅதிபரொருவர், பொலிஸ் மா அதிபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி பொலிஸ் மா அதிபஅதிபரொருவர், சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளர் நாயகம் மற்றும் பல சிறைச்சாலை ஆணையாளர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.


2018ஆம் ஆண்டில் சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையும் 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளும் ஆணைக்குழுவின் தலைவரால் இதன்போது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.


இதன்போது 2021 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிக்கும்போது, குறித்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டுமென ஆணைக்குழு ஏற்கனவே யோசனை முன்வைத்துள்ளதோடு, அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.


அத்துடன், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பு, சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் போதுமான சுகாதார பாதுகாப்பு மற்றும் நீர் வசதிகள் இன்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


போகம்பரை மற்றும் மஹமோதர ஆகிய சிறைச்சாலைகளின் புனர்நிர்மாணப் பணிகள்,  காலி, மாத்தறை மற்றும் வாரியபொல சிறைச்சாலைகளை பரந்த அளவிலான இடங்களுக்கு மாற்றுவது மற்றும் களுத்துறை மற்றும் பூஸ்ஸ சிறைச்சாலைகளில் புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.


சிறைச்சாலை நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்ட சட்டங்களை திருத்துவதற்கும், வீட்டுக் காவலில் வைப்பதற்காக தடுப்பு காவலுக்கான மாற்று வசதிகளை வழங்குவதற்குத் தகுந்த தொழில்நுட்ப நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.