வடக்கு, கிழக்கு காணிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு

வடக்கு, கிழக்கு காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 21-08-2026 | 7:12 AM

Colombo (News 1st) கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்பு பிரிவினரால் கையகப்படுத்தப்பட்ட, தற்போது விடுவிக்கப்பட கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.


இவ்வாறு விடுவிக்கப்படும் காணிகளை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகள் ஆகியவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பாக பாராளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று (20) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.


தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புடன் தொடர்புடையவர்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


அவசியமான காணி அளவை தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்க கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தௌிவுபடுத்தியுள்ளார்.


அதற்காக உயர் உற்பத்தி திறனை பெற்றுக்கொள்ள கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.


கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்கிரமசிங்க, காணி ஆணையாளர் நாயகம், முப்படை தளபதிகள், பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உட்பட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.