வறண்ட வலய பகுதிகளில் தொடர்ந்தும் மழையில்லை

வறண்ட வலய பகுதிகளில் தொடர்ந்தும் மழையில்லை - பாதிக்கப்படும் பயிர்ச்செய்கைகள்

by Staff Writer 06-08-2026 | 2:42 PM

Colombo (News 1st)  நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை காணப்படுகின்ற போதிலும் வறண்ட வலய பகுதிகளில் தொடர்ந்தும் மழை இல்லாத வானிலை நிலவுகின்றது. 

வறண்ட வலய பகுதிகளில் வயல் காணிகளுக்கான நீர் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர்ச்செய்கை பாதிப்புகளுக்கு துரிதமாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக மொனராகலை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற் பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. 

தற்போது தமது அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல் காணிகளுக்கு சென்று பாதிப்புகள் தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கமநல காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது. 

நீர் பற்றாக்குறையினால் நெற் பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது தொடர்பான தகவல்களை கமநல சேவைகள் திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள் அல்லது விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் அபிவிருத்தி அதிகாரிகளுக்கு அறிவிக்க முடியும். 

அத்துடன் கமநல அபிவிருத்தி நிலையங்களில் உள்ள பாதிப்புகளை அறிவிப்பு புத்தகத்திலும் விவசாயிகளின் பயிர்ச்செய்கை பாதிப்புகள் தொடர்பான தகவல்களை பதிவு செய்ய முடியும். 

இந்த இழப்பீடு வழங்குதல் தொடர்பான மேலதிக தகவல்களை விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் 1918 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.