.webp)
-557321.jpg)
Colombo (News 1st) -
போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரு கைதிகள் குழுக்களுக்கிடையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தவர்களில் மேலும் 2 சிறைக்கட்டுப்பாட்டாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
25 மற்றும் 39 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 21 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 500 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளிடமும் எதிர்வரும் நாட்களில் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 05 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மொத்தமாக 2400 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த வாரம் ஏற்பட்ட மோதலின் பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது 600 கைதிகள் மாத்திரமே நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களும் எதிர்வரும் நாட்களில் வேறு சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
தற்போது குறித்த கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாதென குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
