.webp)
-557333.jpg)
Colombo (News 1st) - ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடும் செயற்பாடுகளை அமெரிக்கா மீளவும் ஆரம்பிக்கவுள்ளது.
அமெரிக்க - ஈரான் பரஸ்பர தாக்குதல்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
ஈரானின் துறைமுகங்களிலிருந்து ஹோர்முஸ் நீரிணை ஊடாக வௌியேறும் கப்பல்களுக்கும் ஹோர்முஸ் நீரிணை ஊடாக ஈரானின் துறைமுகங்கள் நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது.
அதனூடாக ஈரானுக்கான பெருமளவான கப்பல் போக்குவரத்து தடைப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை நேரப்படி நாளை(15) நள்ளிரவு முதல் ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடும் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் அனைத்து வர்த்தக கப்பல்களிடமும் 20 வீத கட்டணம் அறவிடப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஈரான் தொடர்ந்தும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலராக செயற்படும் எனவும் கப்பல்களுக்கு 20 வீத கட்டணம் அறவிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் ஈரான் வௌிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆரம்பக்கட்ட போர்நிறுத்தம் முறிவடைந்த பின்னர் ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 3ஆவது நாளாகவும் தாக்குதல்களை நடத்திவருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவுகளுக்கு அமைய ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரானும் தொடர் தாக்குதல்களை மேற்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் கரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை 9 வீதத்தினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
