நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளிடையே அமைதியின்மை

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளிடையே அமைதியின்மை

by Staff Writer 05-07-2026 | 8:52 PM

Colombo (News 1st) நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 02 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

மோதலில் காயமடைந்த 30 கைதிகள் சிகிச்சை பெற்று வருவதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பணிப்பாளர் புஷ்பா கம்லத்கே தெரிவித்தார்.

அவர்களில் 10 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையில் இன்று(05) பகல் மோதல் ஏற்பட்டது.

இதன்போது காயமடைந்தவர்கள் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பணிப்பாளர் புஷ்பா கம்லத்கே தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கைதிகளின் உறவினர்கள் என கூறப்படும் சிலர் சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடியிருந்தனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குழு மற்றும் அதற்கு எதிராக செயற்பட்ட குழுவிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.