போர் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் தீர்மானம்

ட்ரம்ப்பின் போர் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்

by Staff Writer 04-06-2026 | 2:03 PM

Colombo (News 1st) ஈரான் மீதான போரை முடிவிற்கு கொண்டுவருமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டுவந்த போர் அதிகாரச் சட்டம் சார்ந்த தீர்மானம், 215 க்கு 208 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

குடியரசு கட்சியைச் சேர்ந்த 4 முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கொள்கையை எதிர்த்து, எதிர்க்கட்சியினருடன் இணைந்து இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அமெரிக்க சட்டத்தின் பிரகாரம், படையினரை போரில் ஈடுபடுத்திய 60 நாட்களுக்குள் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும்.

அந்த காலக்கெடு முடிந்து விட்டதால், ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளை உடனடியாகத் மீளப் பெற வேண்டும் என இந்த தீர்மானத்தின் மூலம் ட்ரம்ப்பிற்கு உத்தரவிடுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் மக்கள் அவதியுறுவதை நிறுத்த வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டாலும், சட்டமாக கொண்டு வரப்படுவதற்கு அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

டொனால்ட் ட்ரம்ப் தனது நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை முடக்க 'வீட்டோ' அதிகாரத்தை செலுத்தக்கூடும் என வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.