.webp)

Colombo (News 1st) புத்த பகவானின் பிறப்பு, ஞானமடைதல் மற்றும் பரிநிர்வாணத்தை குறிக்கும் வெசாக் பூரணை தினம் இன்றாகும்.
உலக வாழ் பௌத்தர்கள் புத்த பெருமானின் ஜனனம், ஞானம் பெறல், பரிநிர்வாணம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை பக்தி பூர்வமாக இன்று நினைவுகூருகின்றனர்.
தேவர்களின் அழைப்பை ஏற்று இன்று போன்றதொரு வெசாக் பௌர்ணமி தினத்தில் லும்பினி பூங்காவில் இளவரசர் சித்தார்த்தர் அவதரித்தார்.
அரண்மனையிலிருந்து வௌியேறிய சந்தர்ப்பத்தில் வயோதிபர், நோயாளி, பூதவுடல், துறவி எனும் நான்கு காட்சிகளை கண்டு வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்த இளவரசர் இராஜ போகங்களுக்கு விடைகொடுத்து இன்று போன்றதொரு வெசக் பூரணை தினத்தில் ஞானம் பெற்றார்.
உலக மக்களுக்கு நிலையான்மையை உணரச் செய்த புத்த பகவான் இதேபோன்றதொரு நாளில் பரிநிர்வாணம் அடைந்தார்.
புத்த பகவானின் இலங்கைக்கான மூன்றாவது விஜயம் வெசாக் பூரணை தினத்தில் இடம்பெற்றதால் இலங்கை மக்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.
வெசாக் பூரணை தினத்தில் களனிக்கு வருகைதந்த புத்த பகவான் சமன் தேவனின் அழைப்பை ஏற்று சிவனொளிபாத மலையில் கால்தடம் பதித்ததாகவும் நம்பப்படுகிறது.
புத்த பகவானின் வாழ்வின் மூன்று மகோன்னத தருணங்களை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் வெசாக் அலங்காரங்களுக்குள், தோரணங்களுக்கு சிறந்ததோர் இடமுண்டு.
கொழும்பின் பல பகுதிகளில் இம்முறையும் வெசாக் தோரணங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் புராதன வெசாக் அலங்காரப் பந்தலான தொட்டலங்க தோரணம் அனைவரது கவனத்தையும் இம்முறையும் ஈர்த்துள்ளது.
தொட்டலங்க தோரணம் இம்முறை 71 ஆவது தடவையாகக் காட்சிப்படுத்தப்படுகின்றது.
பேலியகொடை நவலோக வெசாக் அலங்காரப் பந்தல் இம்முறை 65 ஆவது தடவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பௌத்த ஜாதகக் கதைகள் இதன் ஊடாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
கிஜ்ஜ ஜாதகக் கதையைப் பிரதிபலிக்கும் தெமட்டகொடை தோரணமும் இம்முறை 45 ஆவது தடவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள வெசாக் தோரணம் கட்டஹாரி ஜாதகக் கதையை சித்திரிப்பதாக அமைந்துள்ளது.
புறக்கோட்டை ஒன்றிணைந்த போதிராஜ சங்கத்தினால் காட்சிப்படுத்தப்படுகின்ற புறக்கோட்டை தோரணத்தின் ஊடாகவும் பௌத்த ஜாதகக் கதை சித்திரிக்கப்படுகின்றது.
தேசிய வெசாக் கொண்டாட்டத்திற்கு இணையாக, மாத்தறை தக்சிண பிரபா' வெசாக் வலயம் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மாத்தறை திஹகொட மிதெல்லவல புராண விகாரை, மாத்தறை நகரக் கடற்கரை, மாத்தறை மிகதாய னை மையமாகக் கொண்டே இந்த வலயம் முன்னெடுக்கப்படுகின்றது.
கண்டி - செனரத்கம லயன்ஸ் கழகத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள வெசாக் தோரணம் பொதுமக்களின் பார்வைக்காக நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.
நாளை வரை இந்த வெசாக் அலங்காரப் பந்தல் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
