.webp)

Colombo (News 1st) மெனின்ஜைடிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 116 நோயாளர்கள் நாட்டின் பல பகுதிகளில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அசுத்தமான நீர் அல்லது உணவு மூலமே இந்த தொற்று பரவுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபிரேம குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை தெனியாயவில் 50 பேரும் தியத்ததலாவையில் 28 பேரும் ரிகல்லகஸ்கட பகுதியில் 25 பேரும் வெலிமடையில் 13 பேரும் மெனின்ஜைடிஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொற்று பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபிரேம தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலையால் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
Meningitis என்பது மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சவ்வுகளில் பக்டீரியா, வைரஸினால் ஏற்படும் தொற்று நிலைமையாகும்.
இது மிகவும் பாரதூரமான நோய் நிலைமை என்பதால் முறையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாமெனவும் நரம்பு மண்டலத்திற்கு நிரந்தர பாதிப்பு ஏற்படலாமெனவும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடுமையான தலைவலி, கடும் காய்ச்சல், கழுத்தை அசைப்பதில் அல்லது வளைப்பதில் சிரமம் ஏற்படுதல், வௌிச்சத்தை பார்ப்பதில் சிரமம், வாந்தி மற்றும் குமட்டல், மயக்க நிலை என்பன இந்த நோய் தொற்றின் அறிகுறிகளாக காணப்படுகின்றன.
நோய்க்கிருமிகள், இருமல் - தும்மல், ஸ்பரிசம் அல்லது நோயாளி பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தல் என்பனவற்றில் மூலம் மற்றொருவருக்கு பரவுமென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளல், நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை உட்கொள்தல் மற்றும் சுகாதார பழக்கவழக்கங்களை பேணுவதன் மூலம் இந்த நோய் நிலைமையை தடுத்து கொள்ள முடியுமெனவும் அவர்கள் கூறுகின்றனர்.
