பிரதமர் -பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் சந்திப்பு

பிரதமர் ஹரிணி - பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் Yvette Cooper சந்திப்பு

by Staff Writer 21-05-2026 | 1:19 PM

Colombo (News 1st) பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் Yvette Cooper ஆகியோருக்கு இடையே இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பிரதமரின் பிரித்தானிய விஜயத்தின் போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

டித்வா சூறாவளியினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்தியில், மறுசீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக பிரித்தானியா வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்காக பிரதமர் இதன்போது தமது நன்றி தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா வழங்கும் பங்களிப்பையும் பாராட்டிய பிரதமர், இலங்கையின் அண்மைக்கால பொருளாதார வளர்ச்சி மற்றும் கொள்கை ரீதியான முன்னுரிமைகள், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் வௌிப்படுத்தியுள்ள ஆர்வம் மற்றும் நாட்டின் சாதகமான பொருளாதாரப் பாதை குறித்தும் பிரித்தானிய இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.

தற்போதைய உலகளாவிய பூகோள அரசியல் முன்னேற்றங்கள், வலுசக்தி துறையில் உள்ள சவால்கள் மற்றும் பிராந்தியத் தொடர்பு மற்றும் நீண்ட கால வலுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுநலவாய கற்றல் பேரவையின் 43ஆவது நிர்வாக சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் பிரித்தானியாவிற்கு இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.