.webp)

Colombo (News 1st) சர்வதேச தேயிலை தினம் இன்றாகும்.
'நிலையான தேயிலை செய்கையின் ஊடாக மக்களை வலுப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தேயிலை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சர்வதேச தேயிலை தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும் மே 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்தியாவின் அசாம் மாநிலத் தேயிலை தோட்டத்தில் சீனத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் முன்னெடுத்த சம்பளப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டே சர்வதேச தேயிலை தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, பங்காளதேஷ், கென்யா, மலாவி, மலேசியா, உகண்டா, தன்சானியா ஆகிய தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் 2005ஆம் ஆண்டு முதல் சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இலங்கை காலணித்துவ ஆட்சியாளர்களின் இரும்புக் கரங்களில் சிக்கித்தவித்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கோப்பி மற்றும் தேயிலை பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்காக தமிழகத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களாக இலங்கைக்கு வரவழைக்கப்பட்டவர்கள் பல தலைமுறைகளாயாக இன்றும் மலையகத்தில் செறிந்து வாழ்கின்றனர்.
1867ஆம் ஆண்டு லூல்கந்துரை பெருந்தோட்டத்தில் ஜேம்ஸ் டெய்லரினால் ஆரம்பிக்கப்பட்ட தேயிலை செய்கை இன்று மலையகத்தில் மாத்திரமல்லாது நாட்டின் மேலும் சில பகுதிகளிலும் வியாபித்து காணப்படுகிறது.
இதனிடையே உலகம் முழுவதும் மக்கள் நாளொன்றுக்கு 2 பில்லியனுக்கும் அதிகமான தேநீர் கோப்பைகளை அருந்துவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதில் அதிகளவில் தேயிலையை நுகரும் நாடாக சீனா காணப்படுகின்றது.
எனினும், ஒரு நபர் சராசரியாக வருடத்திற்கு நுகரும் தேயிலையின் அளவின் அடிப்படையில் துருக்கி உலகில் முதலிடத்தில் உள்ளது.
அதனை தொடர்ந்து அயர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
அதேபோன்று, உலகம் முழுவதும் நுகர்விற்காக ஆண்டுக்கு 6.5 மில்லியன் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.
அந்த உற்பத்திகளுக்கு மத்தியில் Ceylon Tea என்ற நாமத்திற்கு உலகில் மிக உயர்ந்த அங்கீகாரமும் அதிகளவான கேள்வியும் நிலவுகின்றது.
இதன் காரணமாக, நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
எவ்வாறாயினும், மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக ஏனைய நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதை போன்று உள்நாட்டு தேயிலை ஏற்றுமதிக்கும் சுமார் 20 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் பணிப்பாளர் சுதர்மா கருணாரத்ன நியூஸ் ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.
