காலத்தால் ஆற்ற முடியாத காயங்கள்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17ஆவது ஆண்டு

by Staff Writer 18-05-2026 | 5:58 PM

Colombo (News 1st) யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17ஆவது ஆண்டு இன்றாகும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இன்று(18) இடம்பெற்றது.

பொதுக் கட்டமைப்பின் இணைத்தலைவர் தென்கயிலை ஆதினத்தின் தவத்திரு அகத்தியர் அடிகளாரினால் முள்ளிவாய்க்கால் பிரகடனம் 
காலை 10.15க்கு வாசிக்கப்பட்டது.

இதன்பின்னர் காலை 10.29க்கு அக வணக்கத்தை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது மதகுருமார்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு குருமன்வெளி மக்களினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வில் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கஞ்சியும் பரிமாறப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிர்ந்தளிக்கப்பட்டது.