.webp)

Colombo (News1st) அக்கரைப்பற்று பகுதியில் தனது மகளை பாலியல் வன்புணர்வு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தைக்கு 25 வருட சிறைத் தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் வழக்கு நேற்று(15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் சந்தேகநபருக்கு எதிராக கடந்த 2024 ஆம் ஆண்டு இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சட்ட மாஅதிபர் சார்பில் அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆஜராகியிருந்தார்.
முதலாவது குற்றப்பத்திரிக்கையில் தமது மகளை மூன்று தடவைகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாகவும், இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில் தமது மகளை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகவும் தெரிவித்து சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் இந்த குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சந்தேகநபரான தந்தை, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தமது மனநலம் குன்றிய மனைவியுடன் தலைமறைவாகியிருந்தார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மகள் அக்கரைப்பற்று பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றின் கண்காணிப்பில் உள்ளார்.
இந்தநிலையில், 2018 மற்றும் 2019 ஆம் வருடங்களில், மூன்று சந்தர்ப்பங்களில் தமது தந்தை தம்மை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், மற்றுமொரு முறை
பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகவும் சந்தேகநபரின் மகள் கூறியுள்ளார்.
இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை அறிவித்த கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய மூன்று குற்றச்சாட்டுக்களில் ஒரு குற்றச்சாட்டுக்கு, சந்தேகநபரை குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.
அத்துடன், 5000 ரூபா அபராதம் விதித்ததுடன் ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்தார்.
பாரதூரமான பாலியல் துஷ்பிரயாகத்துக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சந்தேகநபரான தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
