.webp)
Colombo (News 1st) இலங்கை மற்றும் Macau இடையே சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக Macao TDM ஊடக வலையமைப்பு மற்றும் சிரச ஊடக வலையமைப்பின் மகாராஜா ஊடக நிறுவனத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(13) கைச்சாத்திடப்பட்டது.
Macau-வில் நடைபெற்ற ஆசிய-பசுபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு இணையாக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
மகாராஜா ஊடக நிறுவனத்தின் சார்பாக சிரச ஊடக வலையமைப்பின் பிரதானியும் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளருமான ஷெவான் டெனியல் மற்றும் TDM ஊடக நிறுவனத்தின் சார்பில் அதன் செயற்குழு தலைவரும் பணிப்பாளர் சபையின் உப தலைவருமான லோர்மன் லோ சொங் மேன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை கொண்ட Macau, சீனாவின் விசேட நிர்வாக பகுதியாகும்.
Macau-வின் அரச ஊடக வலையமைப்பான TDM, 05 தொலைக்காட்சி அலைவரிசைகள், 02 வானொலி அலைவரிசைகள் மற்றும் இணையத்தளங்கள் உள்ளிட்ட புதிய ஊடக வலையமைப்பை கொண்டுள்ளது.
அவர்கள் சீன, ஆங்கிலம் மற்றும் போர்த்துக்கேய மொழிகளில் தமது நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் ஒளிபரப்புகின்றனர்.
TDM Macau ஊடக நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் கருத்து தெரிவித்த கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், இந்த கூட்டாண்மையின் மூலம் Macao மற்றும் சீனாவை மையப்படுத்தி இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதில் தனித்துவமான பங்கை வகிக்க முடியும் என தெரிவித்தார்.
Macau மற்றும் சீன நேயர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு, 'அழகான இலங்கை' எனப்படும் Beautiful Sri Lanka குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ள எதிர்காலத்தில் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் இரண்டு முன்னணி ஊடக நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் வரலாற்று மைல்கல்லாகும்.
இதன்மூலம் இலங்கை - Macau இடையிலான கலாசார, தனிநபர் மற்றும் ஊடக தொடர்புகளை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
மகாராஜா ஊடக நிறுவனம் மற்றும் TDM Macau ஊடக நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நிகழ்ச்சிகள் பரிமாற்றம், ஊடக ஒத்துழைப்பு, கலாசார நிகழ்ச்சிகள், தொழில்சார் ஈடுபாடு மற்றும் பிராந்திய ஒலிபரப்பு கூட்டாண்மையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
ஆசிய-பசுபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் செயற்பாட்டிலுள்ள உறுப்பினர்களாக இவ்விரு நிறுவனங்களும் ஊடக உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தவும் மற்றும் பிராந்தியம் முழுவதும் ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை வழங்கவும் இந்த கூட்டாண்மையை பயன்படுத்த எதிர்பார்க்கின்றன.
