.webp)

Colombo (News 1st) ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேனவிற்கு பிணை வழங்குவதற்காக, கூலிக்கு இருவரை பிணையாளர்களாக அமர்த்தியதாக கூறப்படும் தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் வசிக்கும் 74 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நீண்ட காலமாக இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் கொடுக்கல் - வாங்கலின் போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக பெற்றதாக கபில சந்திரசேன மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 5ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 03 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
கபில சந்திரசேன பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து விடுவிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 100 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டிற்காக தலா 15,000 ரூபா வீதம் பணம் செலுத்தி இருவர் பிணையாளர்களாக முன்னிலைப்படுத்தப்பட்டமை தெரியவந்தது.
குறித்த இரு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
