சஷி வீரவன்ச மீதான வழக்கிற்கான திகதி நிர்ணயம்

சஷி வீரவன்சவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி நிர்ணயம்

by Staff Writer 11-05-2026 | 6:52 PM

Colombo (News 1st) போலி ஆவணங்களை சமர்ப்பித்து முறைகேடாக இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்வதற்காக திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று(11) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபரான சஷி வீரவன்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி புத்திக சந்திரசேகர, வழக்கின் சாட்சியங்களை நெறிப்படுத்துவதற்கு முன்னர் வழக்குடன் தொடர்புடைய கணினி மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் அந்த ஆவணங்கள் பெறப்பட்ட கணினி கட்டமைப்பை தாம் பரிசோதிக்க வேண்டுமென தெரிவித்தார்.

சாட்சிகள் கட்டளை சட்டத்தின் கீழ் தமக்கு இதுவரை அவ்வாறானதொரு அனுமதி வழங்கப்படாத நிலையில் இந்த வழக்கின் விசாரணையை முன்னெடுக்க முடியாது எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதனை கருத்திற்கொண்ட நீதவான் வழக்கு விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் சாட்சியாகப் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் உருவாக்கப்பட்ட கணினி கட்டமைப்பைப் பரிசோதிக்க பிரதிவாதி தரப்பிற்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்த நிலைப்பாட்டை அடுத்த வழக்கு தவணையின் போது நீதிமன்றுக்கு தெரியப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த வழக்கு எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.