.webp)
-615779-556018.jpg)
Colombo (News 1st) இலங்கை மற்றும் வியட்நாம் இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் ஆகியோர் முன்னிலையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
வியட்நாம் - இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் சுற்றுலாத் துறை, பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பு, மதம், சிவில், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
பொலிஸ் பயிற்சி மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சித் துறையில் ஒத்துழைப்புக்காக, வியட்நாமின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மக்கள் பொலிஸ் அகடமி மற்றும் இலங்கை தேசிய பொலிஸ் அகடமி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்,
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்புக்காக, இலங்கை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் வியட்நாம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்,
வியட்நாமின் இன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு மற்றும் இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்,
வியட்நாமின் கலாசாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றிற்கிடையிலான கலாசார ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்,
வியட்நாமின் கலாசார, விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கும், இலங்கையின் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கும் இடையில் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியன பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.
