.webp)

Colombo (News 1st) தபால் திணைக்களத்தில் களப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவிற்கு நீதிமன்றம் இன்று(06) அனுமதி வழங்கியது.
தபால் திணைக்களத்தினால் அமெரிக்காவின் தபால் சேவைக்கு செலுத்தப்பட்ட 626,555 டொலர் பணம் வேறு தரப்பினர் வசம் சென்றுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று அறிக்கை சமர்ப்பித்தது.
சர்வதேச ரீதியில் தபால் கொடுக்கல் - வாங்கல்களை மேற்கொள்ளும் போது சர்வதேச தபால் சங்கத்தின் ஊடாக அதற்கான மின்னஞ்சல் கணக்கு வழங்கப்படுமென விடயங்களை முன்வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களம் இதன்போது தெரிவித்தது.
அவ்வாறான பின்னணியில் அதற்கு புறம்பான மின்னஞ்சல் கணக்கின் ஊடாக இந்த கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இரு சந்தர்ப்பங்களில் இந்த கொடுப்பனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் மன்றில் குறிப்பிட்டனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த விசாரணை அதிகாரிகள், தபால் திணைக்களத்தில் களப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவிற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
விடயங்களை ஆராய்ந்த நீதவான் அந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்கினார்.
