.webp)

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேனவை பிணையில் விடுவிக்குமாறஞ கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று(05) உத்தரவிட்டது.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ் போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முந்தைய வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு தொடர்பான உத்தரவை அறிவிப்பதற்காக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிணை உத்தரவை பிறப்பித்த நீதவான், வழக்கின் தற்போதைய நிலைமை மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை குறிப்பிடத்தக்க விடயமாக கருத்திற்கொண்டு சந்தேகநபருக்கு பிணை வழங்குவதாக தெரிவித்தார்.
சந்தேகநபரை 05 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 03 சரீரப்பிணைகளில் விடுவிப்பதற்கு உத்தரவிட்ட நீதவான், வௌிநாட்டு பயணத்தடை விதித்ததுடன் கடவுச்சீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறு பணித்தார்.
விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் விடயங்களை முன்வைத்த இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி, விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன மற்றும் வீலி கமகே ஆகியோரை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளதாக மன்றுக்கு அறிவித்தார்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த விசாரணை அதிகாரி, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விடயங்களை முன்வைப்பதற்கு தினத்தை வழங்குமாறு கோரினார்.
விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான் வழக்கை எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கான எயார்பஸ் கொடுக்கல் - வாங்கலில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் கபில சந்திரசேன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு 2014ஆம் ஆண்டில் 06 எயார் பஸ்களையும் 2017ஆம் ஆண்டில் 07 எயார் பஸ்களையும் கொள்வனவு செய்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம்பெற்ற முறைகேடான கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
