போதைப்பொருட்களுடன் கைதான தேரர்கள் விளக்கமறியலில்..

போதைப்பொருட்களுடன் கைதான தேரர்கள் விளக்கமறியலில்..

by Staff Writer 02-05-2026 | 6:51 PM

Colombo (News 1st) தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 தேரர்களும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று(02) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து பயணப்பொதிகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள குஷ்  மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கடந்த 26ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் அகுணகொலே அமிதானந்த எனப்படும் தேரரும் கைது செய்யப்பட்டார்.

சந்தேநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர், அவர்கள் இன்று பிற்பகல் நீர்கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்திரகுமார தயாரத்ன எனும் நபர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

அடுத்த வழக்கு விசாரணையின் போது சந்திரகுமார தயாரத்னவை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் இதுவரை கைது செய்யப்படாத அம்பகஸ்முல்லே புண்யரதன தேரர் மற்றும் பெல்பிட்டியே தம்மரக்கித்த தேரர் ஆகியோருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர உத்தரவிட்டுள்ளார்.