.webp)

Colombo (News 1st) பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார்.
இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலே காலமானார்.
1933 செப்டம்பர் 08ஆம் திகதி பிறந்த ஆஷா போஸ்லே, தனது 10 வயதிலே பாட ஆரம்பித்துள்ளார்.
ஹன்ஸ்ராஜ் பாஹ்ல், ஓ.பி.நய்யார், மதன் மோகன், ஆர்.டி.பர்மன், இளையராஜா, அனு மாலிக், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபல கலைஞர்களுடன் அன்னார் பணியாற்றியுள்ளார்.
தமிழில் ஓ பட்டர் ப்ஃளை, நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி, செண்பகமே செண்பகமே உள்ளிட்ட பிரபலமான பாடல்களை பாடி இரசிகர்கள் மனதில் ஆஷா போஸ்லே நீங்காத இடம்பிடித்திருந்தார்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி தாதாசாஹிப் பால்கே, பத்மவிபூஷன், தேசிய விருதுகளை பெற்ற ஆஷா போஸ்லே 1995ஆம் ஆண்டில் கிராமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.
