பூமிக்கு திரும்பிய ஓரியன் விண்கலம்

50 ஆண்டுகளின் பின்னர் மனிதர்களுடன் நிலவுக்கு பயணித்த விண்கலம் பூமிக்கு திரும்பியது

by Staff Writer 11-04-2026 | 10:57 PM

Colombo (News1st) முழு உலகினதும் கவனத்தை ஈர்த்த ஆர்டெமிஸ் II திட்டத்தின் கீழ், நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற ஓரியன் விண்கலம் பாதுகாப்பாக பூமியை வந்தடைந்தது.

அவர்கள் பயணித்த ஓரியன் விண்கலம் இன்று(11) அதிகாலை 5 மணிக்கு சான் டியாகோவுக்கு அருகே உள்ள கடற்பகுதியில் தரையிறங்கியது.

மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை எட்டிய ஆய்வுச் சாதனையை ஆர்டெமிஸ் - 2 குழு படைத்துள்ளது.

50 ஆண்டுகளுக்குப் பின்னர், மனிதர்களை நிலவுக்கு அழைத்து செல்லும் தீர்க்கமானதொரு நடவடிக்கை என ஆர்டெமிஸ் II திட்டத்தை குறிப்பிடலாம்.

1972 ஆம் ஆண்டின் அப்பல்லோ திட்டங்களுக்குப் பின்னர், மனிதர்கள் நிலவுக்கு அருகில் சென்ற முதலாவது விண்வௌி பயணமாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

கடந்த முதலாம் திகதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து ஆர்ட்டெமிஸ் II திட்டம் ஆரம்பமானது.

இந்தத் திட்டத்தின்போது விண்வெளி வீரர்கள் எந்தவொரு பகுதியிலும் தரையிறக்கப்படவில்லை என்றாலும், சந்திரனில் மனிதர்களைத் தரையிறக்கும் அடுத்தகட்ட ஆர்டெமிஸ் III திட்டத்திற்குத் தேவையான பல முக்கியமான ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் கடந்த திங்கட்கிழமை புதிய சாதனையொன்றைப் படைத்தனர்.

பூமியிலிருந்து சுமார் 4 இலட்சத்து 6 ஆயிரத்து 772 கிலோமீட்டர் தூரம் என்ற அதிகபட்ச தூரம் பயணித்து அதிக தூரம் விண்வெளியில் பயணம் செய்த குழுவினராக அவர்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளனர்.

இதற்கு முன்னர் 1970 ஆம் ஆண்டில் அப்பல்லோ திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்கள் பயணித்த 4 இலட்சத்து 171 கிலோமீட்டர் தூரமே சாதனையாக பதிவாகியிருந்தது.

இந்தப் பயணத்தின்போது சந்திரன் மற்றும் பூமியின் பல நிழற்படங்களை விண்வெளி வீரர்கள் பூமிக்கு அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.