மஹிந்தவின் காலஅவகாசம் நிறைவு

மஹிந்தவின் காலஅவகாசம் நிறைவு

by Staff Writer 11-04-2026 | 10:49 PM

Colombo (News1st) சொத்துக்கள், பொறுப்புக்கள் மற்றும் வருமான மார்க்கங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதுவரை பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என, இலஞ்ச விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக அவருக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் ஏப்ரல் 10ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.

சொத்துக்கள், பொறுப்புக்கள் மற்றும் வருமான மார்க்கங்கள் தொடர்பில் 14 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு, இலஞ்ச விசாரணை ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடந்த 23 ஆம் திகதி அறிவித்திருந்தது.

2015 ஆம் ஆண்டில் அவரது சொத்துக்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டிருந்த விசாரணைகளுக்கமைய இதுவரை பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யாமையினால் இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 49 (1) (உ) சரத்திற்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.