பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வழிமுறைகள்

by Staff Writer 11-04-2026 | 11:01 PM

Colombo (News1st) நமது நாட்டில் தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறப்பு காலப்பகுதியில் வீதிவிபத்துகள் இடம்பெறுவதும் இறப்புகள் பதிவாகுவதும் மிக அதிகமாக காணப்படும் நிலையில் அதனை குறைப்பதற்காக பொலிஸாரினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்ற(11) முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான காணொளிகளை பதிவு செய்து பொலிஸாருக்கு சமர்ப்பிப்பதற்காக விசேட வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைய 0704 755 600 எனும் இலக்கத்திற்கு காணொளிகளை பொதுமக்கள் அனுப்பிவைக்க முடியும்.

மீண்டும் அந்த வாட்ஸ்அப் இலக்கம் - 0704 755 600.

இதேவேளை, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முப்படையினர், பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் தலைமையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியில் நாடு முழுவதும் நடத்தப்படும் பல்வேறு விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்வுகளின் பாதுகாப்பு தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளது.

கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு அறையொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

011 201 3051 அல்லது 011 2027 148 அல்லது 011 2027 149 அல்லது 011 2430 912 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக இந்த செயற்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

புறக்கோட்டையிலிருந்து அதிவேக வீதியூடாக கண்டி மற்றும் காலிக்கான விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

தற்போது புறக்கோட்டையிலிருந்து கண்டி வரை தற்காலிக அனுமதிப்பத்திரத்தின் ஊடாக அதிவேக வீதியில் 20 பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வழமையான நேர அட்டவணைக்கு மேலதிகமாக சுமார் ஆயிரத்து 500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தேவையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்காக கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தபட்சம் 50 பஸ்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பெஸ்டியன் மாவத்தை, கடவத்தை, மாக்கும்புர மற்றும் கடுவலை ஆகிய இடங்களிலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டை - அனுராதபுரம், அனுராதபுரம் - காங்கேசன்துறை, மருதானை - மாத்தறை மற்றும் மருதானை - பெலியத்த ஆகிய இடங்களுக்கு இடையே விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பெலியத்தவிலிருந்து மஹவ வரை பயணிக்கும் ''ரஜரட்ட ரெஜினி'' ரயில், புத்தாண்டு காலப்பகுதியில் அனுராதபுரம் வரை பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை பயணிக்கும் 'மஹவ அலுவலக ரயில்' இன்றும் நாளையும் மாத்திரம் அனுராதபுரம் வரை பயணிக்கவுள்ளது.