.webp)

Colombo (News 1st) எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
0 முதல் 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரிவிற்கான மாதாந்த கட்டண அதிகரிப்பு 15 ரூபாவாகும்.
31 முதல் 60-இற்கு இடைப்பட்ட அலகுகளுக்கு 6.9 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கட்டண அதிகரிப்பு 45 ரூபாவாகும்.
61 முதல் 90-இற்கு இடைப்பட்ட அளவிலான அலகுகளுக்கு 6.9 வீதத்தினால் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த பிரிவிற்கான மாதாந்த கட்டண அதிகரிப்பு 120 ரூபாவாகும்.
91 முதல் 180 மின் அலகுகளுக்கு 7.2 வீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கான மாதாந்த கட்டணம் 420 ரூபாவினால் உயர்வடையவுள்ளது.
மாதாந்தம் 180 மின் அலகுகளுக்கும் அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு 25 வீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்களுக்கு 180 அலகுகளுக்கு குறைவான பிரிவுகளுக்கு மின் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.
180-இற்கும் அதிகமான மின் அலகுகளுக்கான கட்டணம் 9.6 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணங்கள் 8 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்தார்.
கைத்தொழில் துறைக்கான கட்டணங்கள் 8.7 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஹோட்டல் துறைக்கான கட்டணங்கள் 9.9 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்தார்.
அரச நிறுவனங்களுக்கான கட்டணங்கள் 14.4 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக மின்சார சபை 13.56 வீத கட்டண திருத்தத்தை கோரியிருந்தது.
சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் மின்சார சபையின் செலவினங்கள் 15 வீதத்தை விட அதிகரிக்குமாயின் மீண்டும் மின் கட்டண அதிகரிப்பைக் கோர முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்தார்.
குறித்த செலவின அதிகரிப்பை ஆதாரங்களுடன் நிறுவுவதற்கான ஆவணங்களை மின்சார சபை இதற்காக சமர்ப்பிக்க வேண்டுமென அவர் கூறினார்.
அவ்வாறானதொரு கோரிக்கை முன்வைக்கப்படுமாயின் அதனை ஆராய தயார் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்தார்.
