ஈரானுக்கு 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்த ட்ரம்ப்

ஈரானுக்கு 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்த டொனால்ட் ட்ரம்ப்

by Staff Writer 27-03-2026 | 6:30 PM

COLOMBO (News 1st) ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அழிக்கும் நடவடிக்கையை மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போலிச் செய்திகளை உருவாக்கும் ஊடக நிறுவனங்களும் ஏனைய நபர்களும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்ற போதிலும் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றின் ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார். 

ஏப்ரல் 6ஆம் திகதி இரவு 8 மணியுடன் அந்த கால அவகாசம் நிறைவடைவதாக ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய இலங்கை நேரப்படி ஏப்ரல் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 இற்கு அந்த காலஅவகாசம் நிறைவடையவுள்ளது. ஈரான் 48 மணித்தியாலங்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழிப்பதாக அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை எச்சரித்திருந்தார். குறித்த கால அவகாசம் நிறைவடைவதற்கு சுமார் 12 மணித்தியாலங்கள் எஞ்சியிருந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அந்நாட்டின் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு தாம் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அறிவித்தார். ஈரானுடன் 2 நாட்களாக நடைபெற்று வரும் நீண்ட மற்றும் செயற்றிறனான பேச்சுவார்த்தைகளே தாக்குதல்கள் ஒத்திவைக்கப்பட காரணம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ஈரான் அந்த அறிவிப்புகளுக்கு பாரிய எதிர்ப்பை தெரிவித்திருந்தது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ஈரான் தொடர்ந்து நிராகரித்து வந்த பின்னணியில் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பகிரங்கமாக ஏற்றுக் கொள்வதற்கு ஈரான் பிரதிநிதிகள் அச்சமடைந்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இவ்வாறானதொரு பின்னணியில் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இந்த பதிவினை இட்டபின்னர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொக்ஸ் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியொன்றுடன் தொலைபேசி ஊடாக இணைந்துகொண்டார். ஈரான் தன்னிடம் 7 நாட்கள் கால அவகாசம் கோரிய போதிலும், அவர்களிடமிருந்து எரிபொருள் பரிசொன்று கிடைத்தமையால் அந்த கால அவகாசத்தை 10 நாட்கள் வரை நீடிக்க தாம் தீர்மானித்ததாக இதன்போது கூறினார். இது தொடர்பில் ஈரான் மிகவும் நன்றியுடன் இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். ட்ரம்ப்பின் புதிய அறிவிப்புகள் தொடர்பில் ஈரான் அரசாங்கம் இதுவரை எந்தப் பதிலையும் வழங்கவில்லை.

ட்ரம்ப் கூறிய ஈரானின் பரிசுப் பொருள்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் புதிய உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளராக மார்க்வைன் முல்லின் பதவியேற்கும் நிகழ்வின் போது, ஈரான் அமெரிக்காவிற்கு அனுப்பிய ஏதோவொரு பரிசுப் பொருள் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்தார். அது என்னவென்று ஊடகவியாளர்கள் வினவியபோது அதற்குப் பதிலளிக்க மறுத்த அமெரிக்க ஜனாதிபதி அந்த பரிசுப் பொருள் தொடர்பாக வெளிப்படுத்தினார். ஈரானுக்கு எதிரான போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக, டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமெரிக்க அமைச்சரவை கூடிய சந்தர்ப்பத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் மீதான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் மசகு எண்ணெய் பீப்பாய்களை ஏற்றிய 8 எரிபொருள் கப்பல்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதாக ஈரான் பிரதிநிதிகள் குறிப்பிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் இதன்போது தெரிவித்தார். தாம் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தவிட்டாலும் பாகிஸ்தான் கொடியின் கீழ் பயணிக்கும் 8 எரிபொருள் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதாக செய்தியறிக்கையொன்றில் தாம் பார்த்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். இதனிடையே ஈரான் விடுத்த பிழையான அறிக்கைக்காக மன்னிப்புக் கோரும் வகையில் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு கிடைக்கும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தாம் வெனிசுவேலா ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் நகைச்சுவையாகக் கூறியமை அமைச்சரவையை சிரிக்க வைத்தது. ஈரான் ஆட்சியின் 47 வருட வரலாற்றில் இதுவே அவர்களின் பலவீனமான காலம் என அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். இதேவேளை, பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி-7 நாடுகளின் மாநாட்டிற்குப் செல்வதற்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஊடகவியலாளர்களின் சில கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஈரான் மீது தரைவழி ஆக்கிரமிப்பின்றி ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க முடியுமா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வியெழுப்பினர். எனினும், மார்கோ ரூபியோ அதற்குப் பதிலளிப்பதைத் தவிர்த்துக்கொண்டார். ஈரான் தரப்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது யார் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கும் அவர் நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்து விட்டார்.

ஈரானின் குற்றச்சாட்டுகள்

அமெரிக்கப் படைகள் வளைகுடா பிராந்திய அமைப்பு நாடுகளின் மக்களை பணயமாகப் பயன்படுத்தியதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் அமெரிக்க இராணுவத் தளங்கள் இருந்தபோதிலும் போர் ஆரம்பித்ததிருந்து அமெரிக்கப் படையினர் அந்தத் தளங்களை விட்டு வெளியேறி ஹோட்டல்களில் தங்கியுள்ளதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். வளைகுடா பிராந்திய அமைப்பில் பஹ்ரைன், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

ஈரானின் இராணுவ நடவடிக்கைகள்

அமெரிக்காவால் முன்னெடுக்கப்படக்கூடிய தரைவழி ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளத் தயாராவதற்காக ஈரான் சுமார் ஒரு மில்லியன் இராணுவத்திற்காக பொதுமக்களை திரட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கீழ் இயங்கும் பசிஜ் துணை இராணுவக் குழுவின் நிலையங்களுக்கு நூற்றுக்கணக்கான ஈரானியர்கள் தாமாக முன்வந்து இணைவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிரி நாடொன்று பிராந்திய நாடொன்றின் ஒத்துழைப்புடன் ஈரானின் தீவொன்றைக் கைப்பற்றத் தயாராகி வருவதாக ஈரானின் சபாநாயகர் எக்ஸ் தளத்தில் நேற்றுமுன்தினம் பதிவிட்டிருந்தார். 


ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய நிலைமை


இதனிடையே ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பதற்கு மலேசிய கப்பல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனது நாட்டு கப்பல்கள் இந்த கடல் மார்க்கத்தைப் பயன்படுத்துவதற்கு முன்கூட்டியே அனுமதி வழங்கியமைக்காக ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் விசேட அறிவிப்பை விடுத்துள்ளார்.

சர்வதேச அரசியலில் எந்தவொரு பக்கமும் சாராத கொள்கையைப் பின்பற்றும் மலேசிய அரசாங்கம் இந்த கடல் மார்க்கம் ஊடாக எத்தனை கப்பல்கள் பயணித்தன அல்லது அதற்கான நிபந்தனைகள் என்ன என்பது தொடர்பில் மேலதிக கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்துக்கொண்டார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏனைய செய்திகள்