ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் இன்று

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் இன்று

by Staff Writer 21-03-2026 | 6:20 PM

Colombo (News 1st) இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம் மக்கள் இன்று(21) ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இஸ்லாம் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையால் ஏழைகளின் பசியை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற படிப்பினையை நோன்பு உணர்த்துகின்றது.

புனித ரமழான் மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, ஒருமாத காலமாக நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் மனமகிழ்ச்சியுடன் நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.

ரமழான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதும் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

முஸ்லிம்களின் இரு பெருநாட்களில் ஒன்றே ஈதுல் பித்ர் எனப்படும் நோன்பு பெருநாளாகும். 

காலையிலே நீராடி நறுமணம் பூசி புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்கு செல்லும் முஸ்லிம் மக்கள் அங்கு விசேட தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஈடுபடுவர்.

அதன் பின்னர் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக இந்த நாளை கொண்டாடுகின்றனர்.

அனைத்து இஸ்லாமியர்களும் இந்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக பித்ரா மூலம் ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதையும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.

வயிற்றில் உள்ள சிசு முதல் வயோதிபர்கள் வரை அனைவரும் பித்ராவை வறிய மக்களுக்கு வழங்குவது கடமையாகும்.

ரமழான் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முழு உலகமும் கடினமான மற்றும் சவாலான சூழலை எதிர்நோக்கியுள்ள ஒரு தருணத்தில், இவ்வருட ரமழான் பெருநாளைக் கொண்டாட நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மக்கள் ஒருமாத காலமாக நோற்ற நோன்பு மற்றும் தொழுகையின் ஆசீர்வாதத்தால், உலகளாவிய நெருக்கடி நிலைமைகள் விரைவில் நீங்கி அனைவரும் எதிர்பார்க்கின்ற, அனைவரினதும் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படுகின்ற ஒரு சகவாழ்வு மிக்க உலகம் உருவாக வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டதை போலவே, இந்த சவாலையும் தைரியமாக எதிர்கொண்டு அதனை சரியாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் வீழ்ச்சியடையாமல் முன்னோக்கி கொண்டு செல்ல அரசாங்கம் என்ற ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

புனித ரமழானை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய, ரமழான் மூலம் கிடைக்கும் ஆன்மீக ஒழுக்கமானது, தற்போதைய சவால்கள் மற்றும் நெருக்கடிகளை வென்று நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்குப் பெரும் சக்தியாக அமையும் என தெரிவித்துள்ளார்.

ரமழான் பெருநாளின் ஊடாகப் பிரதிபலிக்கப்படும் பொறுமை மற்றும் சகோதரத்துவம் போன்ற பண்புகளை நாட்டின் பொது நலனுக்காகப் பயன்படுத்துவது தற்காலத்தின் பிரதானத் தேவையெனவும் பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.