.webp)

COLOMBO (News 1st) கொழும்பு கொட்டாஞ்சேனை - புளூமென்டல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி 2000 லீட்டர் டீசலை கொண்டுசென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கெட்டப்புலாவை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 10 பெரல்களில் நிரப்பப்பட்டிருந்த 2000 லீட்டர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பயணித்த லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு மத்தியில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டை முறையாக முகாமைத்துவம் செய்யும் நோக்கில் அண்மையில் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில், சட்டவிரோதமாக எரிபொருளை சேகரிப்போருக்கு எதிரான சுற்றிவளைப்புகள் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுற்றிவளைப்புகளுக்கான குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் பதுக்கப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் தெரிந்தால், 1997 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
சரியான தகவல்களை வழங்குவோருக்கு எதிர்காலத்தில் சன்மானங்கள் வழங்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அறிவிக்க வேண்டிய இலக்கம் - 1997
