.webp)

Colombo (News 1st) சந்தையில் போதியளவு லிட்ரோ சமையல் எரிவாயு உள்ளதெனவும் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் லிட்ரோ லங்கா நிறுவனம் (Litro Gas Lanka Limited) அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பு சந்தையில் நிலவும் எரிவாயு சிலிண்டர்களுக்கான கேள்வி குறித்து பதிலளித்துள்ள லிட்ரோ லங்கா நிறுவனம் (Litro Gas Lanka Limited), போதியளவு கையிருப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் உறுதியளித்துள்ளது.
சந்தையில் ஏற்பட்ட எதிர்பாராத கேள்வி அதிகரிப்பு மற்றும் கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி ஏற்பட்ட 2 நாட்கள் விநியோகத் தடை காரணமாகவே இந்த தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட்டதாக லிட்ரோ நிறுவனம் இன்று(19) வௌியிட்ட அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.
சாதாரண விநியோக நடவடிக்கைகளை மீள முன்னெடுக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் சன்ன குணவர்தன தெரிவிக்கிறார்.
பெப்ரவரி 17, 18ஆம் திகதிகளில் 284,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் ஏற்கனவே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை மேலும் 351,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகத்தை மேலும் சீரமைக்கும் நோக்கில் லிட்ரோ நிறுவனம் தேவையான அளவு கையிருப்புகளுக்கான முன்பதிவுகளை ஏற்கனவே செய்துள்ளதாகவும் இம்மாத இறுதிக்குள் 3 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாதென உறுதியளித்த லிட்ரோ நிறுவனத் தலைவர் பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைந்து சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய வேண்டியதில்லை எனவும் அறிவுறுத்தினார்.
