இலங்கையின் முயற்சிகளுக்கு IMF பாராட்டு

இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு IMF முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva பாராட்டு

by Staff Writer 18-02-2026 | 3:35 PM

Colombo (News 1st) நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், கலாநிதி Kristalina Georgieva பாராட்டு தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி Kristalina Georgieva ஆகியோருக்கு இடையில் நேற்று(17) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அண்மைக்கால பொருளாதார மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை IMF முகாமைத்துவ பணிப்பாளர் இதன்போது பாராட்டினார்.

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டெழும் திறனை கட்டியெழுப்புவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என கலாநிதி Kristalina Georgieva வலியுறுத்தினார்.

டித்வா சூறாவளியின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்புகளை பிரதமர் பாராட்டினார்.

அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை உறுதி செய்தல், சுற்றுலாத்துறையின் தரத்தை மேம்படுத்துதல், நிலையான முதலீட்டு வாய்ப்புகளை ஈர்ப்பதன் அவசியம் ஆகியன குறித்தும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.