.webp)

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று(11) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வழக்கு விசாரணை சஹன் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி, ரசந்த கொடவெல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 04 குற்றவாளிகளுக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு தலா 10,000 ரூபா அபராதம் விதித்து நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரின் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபா நட்டஈட்டை இன்றைய தினத்திற்குள் வழங்குமாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நட்டஈட்டை செலுத்த தவறின் மேலும் 12 மாதங்கள் மேலதிக சிறைத்தண்டனையை விதிக்கப்படும் என நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கின் ஏனைய 23 சந்தேகநபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2022 மே 09ஆம் திகதி காலிமுகத் திடலில் நடைபெற்ற அமைதி போராட்டத்தின் போது பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தராக செயற்பட்ட ஜயந்த குணவர்தன ஆகியோர் மீது நிட்டம்புவ நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது இருவரும் உயிரிழந்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் 41 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
