.webp)

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கின் 2ஆவது சந்தேகநபரான சமன் ஏக்கநாயக்க, பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தி 36 மணித்தியாலங்களில் 166 இலட்சம் ரூபா நிதியை செலவிட்டு தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(28) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக இங்கிலாந்து சென்றமை உத்தியோகபூர்வ விஜயம் அல்லவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் 2023 செப்டம்பர் 22, 23ஆம் திகதிகளில் 36 மணித்தியாலங்களில் 166 இலட்சம் ரூபா பொது நிதியை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
