முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர்

by Staff Writer 28-01-2026 | 1:54 PM

COLOMBO (News 1st) - தமக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் முன்னிலையாவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்ரீ விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்குபற்றுவதற்கு இலண்டன் செல்வதற்காக அரசாங்க நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் திகதி, ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியதையடுத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அன்றைய தினம் பிற்பகல் வேளையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், விடயங்களை ஆராய்ந்த நீதவான் ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பின்னர் முன்வைக்கப்பட்ட மருத்துவ அறிக்கையை கருத்திற் கொண்டு, தலா ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்க உத்தரவிட்ட நீதவான் வழக்கு விசாரணையை ஒக்ேடாபர் 29 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எமுத்துக் கொள்ளப்பட்ட போது, இது குறித்த விசாரணையை விரைவுபடுத்தி அதன் முன்னேற்றம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.