இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் இன்று

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் இன்று

by Staff Writer 26-01-2026 | 5:37 PM

Colombo (News 1st) இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் தேசிய நிகழ்வு இன்று(26) முற்பகல் புதுடெல்லி நகரில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

பிரித்தானியாவின் முடியாட்சியில் இருந்து முழுமையாக விடுபட்டு இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டி, அந்நாட்டின் அரசியலமைப்பை முறையாக ஏற்றுக்கொண்டு செயற்படுத்தியதை குறிக்கும் வகையில் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

77ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் Ursula von der Leyen, ஐரோப்பிய பேரவை தலைவர் António Costa ஆகியோர் பிரதம விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இம்முறை குடியரசு தின அணிவகுப்பின் தொனிப்பொருளாக "வந்தே மாதரம் - 150 ஆண்டுகள்'' தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 14 பேர் உள்ளிட்ட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் வகையில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 03 பகுதிகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த வருடம் பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சு நேற்று(25) வௌியிட்டது.

மறைந்த பிரபல பொலிவூட் நடிகர் தர்மேந்திரா, கேரளாவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதனந்தன், முன்னாள் நீதிபதி கே.டி.தோமஸ், வயலின் கலைஞர் என்.ரஜம், முன்னாள் அரசியல் தலைவர் பி.நாராயணன் ஆகிய ஐவருக்கு பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நடிகர் மம்மூட்டி, டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், பாடகி அல்கா யக்னிக், பகத் சிங் கோஷ்யாரி, வைத்தியர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி தொழிலதிபர் உதய் கோட்டக் உள்ளிட்ட 13 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர், மறைந்த ஹிந்தி நடிகர் சதிஷ் ஷா, கொக்கி வீராங்கனை சவிதா பூனியா, சிலம்ப கலைஞர் கே.பழனிவேல் உள்ளிட்ட 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த 2 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும் 11 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இதில் ஒரு பத்ம ஸ்ரீ விருதை இருவர் பங்கிட்டுக் கொள்கின்றனர்.

விருது பெற்ற அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக பத்ம விருது பெறும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் எனவும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தங்களது பண்பு, அர்ப்பணிப்பு, சேவை ஆகியவை நமது சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதாக தமது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பத்ம விருதுகள் எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளன.