.webp)

Colombo (News 1st) தெற்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 02 மீன்பிடி படகுகளில் இருந்து 296 கிலோகிராமுக்கும் அதிக ஜஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் கைது செய்யப்பட்ட குறித்த 11 சந்தேகநபர்களையும் கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 07 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு கடற்பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கடந்த நேற்று முன்தினம்(23) கடற்படையினர் விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது 02 மீன்பிடி படகுகளுடன் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தெவிது எனும் படகிலிருந்து 05 மீனவர்களும் சூட்டி மல்லி எனும் படகிலிருந்து 06 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்களுடன் 02 படகுகளும் இன்று(25) முற்பகல் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
குறித்த படகுகளிலிருந்து 184 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 112 கிலோகிராம் ஐஸ் என்பன கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
அவற்றின் பெறுமதி 450 கோடி ரூபாவிற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.
எக்காரணத்திற்காகவும் எத்தகைய போதைப்பொருளையும் நாட்டிற்குள் கொண்டு வர முடியாதென பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவராமல் தடுப்பதற்காக சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதியமைச்சர் கூறினார்.
கடந்த ஆண்டிலேயெ அதிக தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அவற்றின் பெறுமதி 1,000 கோடி ரூபாவிற்கும் அதிகமெனவும் பிரதியமைச்சர் அருண ஜயசேகர சுட்டிக்காட்டினார்.
